MCC இன் உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக சங்கக்கார நியமனம்

7 months ago
SPORTS
aivarree.com

எம்.சி.சி.யின் (MCC) உலக கிரிக்கெட் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி, ஜஸ்டின் லாங்கர், கிரேம் ஸ்மித், இயன் மோர்கன் மற்றும் ஹீதர் நைட் ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று எம்.சி.சி. அறிவித்துள்ளது.

இதேவ‍ேளை, வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான மார்க் நிக்கோலஸ், மெரிலிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் குமார் சங்கக்கார எம்.சி.சி. யின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பதவியை சங்கக்கார ஏற்றபோது, எம்.சி.சி. தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பிரிட்டன் அல்லாத நபர் என்ற பெருமையினையும் அவர் பெற்றார்.

சங்கக்காரா 2021 ஆம் ஆண்டு வரை MCC இன் தலைவராக பணியாற்றினார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் சங்கக்கார இலங்கை அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,234 ஓட்டங்களையும் 56 டி:20 போட்டிகளில் விளையாடி 1,382 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

அவரின் தலைமையில் இலங்கை 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ரன்னர் அப் இடத்தை பெற்றது.

2014 ஆம் ஆண்டு டி:20 உலக் கிண்ணத்தை கைப்பற்றியது.

2015 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சங்கக்கார ஐ.பி.எல். உரிமையாளரான ராஜஸ்தான் ரோயல்ஸின் கிரிக்கெட் இயக்குநராகவும், தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

அதைத் தவிர அவர் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.