நீடித்த எண்ணெய் விலை உயர்வு தொடர்பில் ஓபெக் எச்சரிக்கை

7 months ago
aivarree.com

சர்வதேச சந்தையில் எரிசக்தி தேவை அதிகரிக்கும் போது, எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர்வடையும் என Opec+ இன் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

Opec+ என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.

இது சந்தையில் எவ்வளவு மசகு எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றது.

இந் நிலையில் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் பிபிசியிடம் பேசியபோதே, அதன் செயலாளர் நாயகம் ஹைதம் அல் கைஸ் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு நாளைக்கு சுமார் 2.4 மில்லியன் பீப்பாய்கள் தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.

சவுதி அரேபியா தனது மசகு எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சவுதி அரேபியா, ரஷ்யா இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஓபெக்+ உறுப்பினர்கள் ஆகியோர் உற்பத்தியை குறைப்பதற்கான முடிவினை எடுத்துள்ளனர்.

இந்த முடிவானது 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் “குறிப்பிடத்தக்க விநியோக பற்றாக்குறையை” ஏற்படுத்தக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது.

2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எண்ணெய் விலை உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது.

இந்த ஆண்டு மே மாதத்தில் அவை ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டொலர்களாக சரிந்தன.

எனினும் அந்த வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காகக உற்பத்தியாளர்கள் எண்ணெய் உற்பத்தி குறைப்பினை அறிவித்தமையினால் சந்தையில் எண்ணெய் விலைகள் படிப்படியாக உயர்ந்துள்ளது.

செவ்வாய் (03) பிற்பகல் ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 90.05 அமெரிக்க டொலர்களாகவும், யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 88.23 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது.

குறைந்த விநியோகம் குறித்த கணிப்புகளுக்கு மத்தியில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று எதிர்வரும் நாட்களில் 100 அமெரிக்க டொலர்களை விஞ்சக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது முக்கிய நாடுகளில் பொருளாதாரங்களில் பணவீக்கத்தில் தாக்கத்தை செலுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இவ்வாறான நிலையில் எண்ணெய் துறை முதலீட்டில் Opec அதிக அக்கறை கொண்டுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஹைதம் அல் கைஸ் கூறியுள்ளார்.

2045 ஆம் ஆண்டிற்கு எண்ணெய் தொழில்துறைக்கு 14 ரில்லியன் அமெரிக்க முதலீடு தேவைப்படும்.

இன்றைய நிலைமையை விட 2045 ஆம் ஆண்டளவில் ஆற்றல் தேவை கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.