ரூபவாஹினி, SLBC ஆகியவற்றை பொது நிறுவனங்களாக மாற்ற தீர்மானம்

6 months ago
Sri Lanka
aivarree.com

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது.

குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் (23) கூடியபோதே இவ்விடயம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு முதலான புள்ளிவிபரங்களை முன்வைத்து இந்த அலைவரிசைகள் எவ்வாறு நஷ்டம் அடைந்துள்ள நிலையைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டு 277 மில்லியன் ரூபாவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டில் 457 மில்லியன் ரூபா நஷ்டத்தை அடைந்திருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த அலைவரிசைகளுக்குத் திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைப் பொது நிறுவனங்களாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.