வட்டி வீதங்கள் மேலும் குறைகின்றன – இலங்கை பொருளாதார நிலை

7 months ago
aivarree.com

இலங்கை மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதம் என்பவற்றை மேலும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கூடிய மத்திய வங்கியின் நாணய சபை கொள்கை வட்டிவீதங்களை குறைக்காது பேணுவதற்கு தீர்மானித்திருந்தது.

எனினும் இம்மாத ஆரம்பத்தில் கூடிய நாணய சபை, வட்டிவீதங்களை கடந்த ஐந்தாம் திகதி முதல் 100 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதம் 11 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலைமைகளை ஆழமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக இலங்கை அரசாங்கத்தின் வருவாயில் ஏற்றம் ஒன்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கமானது ஒற்றையிலக்கத்துக்கு வந்துள்ளமையும் இதற்கொரு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்டிருந்த பெரும் பொருளாதார நெருக்கடியாலும், அதன் விளைவாக அதிகரித்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கொள்கை வட்டிவீதங்களை மத்திய வங்கி 10.5 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியம் வழங்க ஒப்புகொண்ட 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான பிணையெடுப்பு கடனுதவியின் பயனாக, தற்போது மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை 550 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.

அதன் மூலம் அரசாங்கம் வெளியிட்ட 2024ல் முதிர்ச்சியடையக்கூடிய சர்வதேச முறிகள் ஊடான வருவாய் மட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் கொடுப்பனவுக்கான முதலாம் ஆய்வு பேச்சுவார்த்தையில் இலங்கை தோல்வியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 19வது தடவையாகவும் முறியவடையக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அரசாங்கம், இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், வெற்றியளிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றும் கூறி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் அண்மையில் பல்வேறு நிபந்தனைகளை அல்லது அரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளை வெளியிட்டிருந்தது.

அவற்றில் மிக முக்கியமானது நிதிகொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான படிமுறையாகும்.

இதன் ஊடாக அரசாங்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையின்றி இருக்கிறது என்று பொருள்கொள்ள முடியும்.

இலங்கை அரசாங்கத்தின் மீது ஏற்கனவே பாரிய ஊழல்குற்றச்சாட்டுகள் இருக்கின்றமையும் புறந்தள்ள முடியாத ஒருவிடயமாகும்.

இதுவொருபுறமிருக்க இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் பணவீகமானது 1.3 சதவீதமாக குறைவடைந்திருப்பதுடன், உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு நாணய ஒதுக்கமும் கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகுpறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வுகூரலை வெளியிட்டுள்ள உலக வங்கி, முன்னதாக வெளிப்படுத்திய 4.2 சதவீத சுருக்கத்தை, 3.8 சதவீதமாக குறைத்திருக்கின்றமையும் சிறப்பான ஒரு முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் உள்நாட்டு சந்தையில் வட்டிவீதங்கள் மேலும் கணிசமாக குறைவடையும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.
முதல் தடைவையாக கொள்கை வட்டிவீதங்கள் இந்த ஆண்டு குறைக்கப்பட்ட போதும் கூட வர்த்தக வங்கிகள் வட்டிவீதங்களை குறைத்திருக்கவில்லை.

இப்போதும் கூட வர்த்தக வங்கிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வட்டிவீதங்களை குறைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மத்திய வங்கிய எவ்வாறான தீhமானங்களை எடுத்தாலும், அதன் ஊடாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை கிடைக்கச் செய்கின்ற பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது.

இதற்கான நடைமுறைப்படுத்தல்களை சீராக இடம்பெற செய்ய அரசாங்கம் சட்டங்களை இறுக்கப்படுத்த வேண்டும் என்பதே பலரதும் கோரிக்கையாக உள்ளது.