- மின் கட்டண அதிகரிப்பு கைவிடப்படும் நிலையில்
- அமைச்சர் கஞ்சனவை பதவி விலக்க அழுத்தம்
- மின் கட்டண ஏற்றத்துக்கு மாற்றுச் சூழ்ச்சி
- பெற்றோலும் டீசலும் 25 ரூபாவால் அதிகரிக்கலாம்.
இலங்கையில் மின்சார கட்டணத்தை 2000 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சர் கஞ்சன விஜயசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அவர் பல்வேறு நியாயங்கள் கற்பிக்கிறார்.
ஆனாலும் இந்த கட்டண அதிகரிப்பு சற்றும் நியாயமற்றது என்றும், அது சாதாரண பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாதது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பின்படி, குறைந்த வருமானம் பெறுகின்ற ஒரு குடும்பம் 30 அலகுகளுக்குள் மாதாந்தம் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் இப்போது அதற்கான கட்டணமாக 330 ரூபா இருக்கும் என்றாலும், மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது 1300 ரூபாவாக அதிகரிக்கும்.
அதேபோன்று 90 அலகுகளுக்குள் மாதாநாந்தம் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்ற குடும்பம் ஒன்று இப்போது அதிகபட்சமாக 1260 ரூபாவை கட்டணமாகச் செலுத்துகின்ற போதும், மீண்டும் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது 3,670 ரூபாவாக அதிகரிக்கும்.
இந்த இரண்டு பிரிவுகளிலேயே அதிகப்படியான மின்சார பயனாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த யோசனையை அமைச்சர் கஞ்சன விஜயசேகர அமைச்சரவையில் முன்வைத்த போது, அதுதொடர்பில் சில அமைச்சர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு இந்த கட்டண அதிகரிப்பு கட்டாயம் என்று கூறி அமைச்சர் அதனை முன்வைத்திருந்தார்.
எனினும் இது மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதது என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அதன் விளைவாகக்கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயத்தை உடனடியாக அவதானத்துக்கு உட்படுத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அய்வரிக்கு வழங்கிய தகவலின் படி, இந்த யோசனைக்கு அமைவாக மின்கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சி, அவ்வாறே கைவிடப்படும் என்று தெரிகிறது.
இது இவ்வாறிருக்க, அமைச்சர் கஞ்சன விஜயசேகர உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
‘மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அவர் இதனுடன் தொடர்பு பட்ட ஏனைய தரப்புடன் இணைந்து செயற்படத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர் தன்னிச்சையாக சில தீர்மானங்களை எடுத்து அதனை அமல்படுத்த முயல்கிறார்.
இதனால் அவரை உடனடியாக பதவி நீக்கி பொருத்தமான வேறொருவரை நியமிக்குமாறு’, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன வலியுறுத்தியுள்ளார்.
‘கடந்த ஆகஸ்ட் மாதம் 75 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமையானது, இலங்கை மின்சார சபையினால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட 4 யோசனைகளின் அடிப்படையிலானது.
இதன்போது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நாட்டு மக்களின் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டே மின்கட்டணத்தை அதிகரித்தது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான சூழ்ச்சியொன்றே தற்போது இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது 2000 சதவீத மின்சார கட்டண உயர்வுக்கான முயற்சி இடம்பெறுகிறது என்ற கருத்தாடலை நாட்டில் ஏற்படுத்திவிட்டு, அதற்குப் பதிலாக 100 சதவீத கட்டண அதிகரிப்பை அமுலாக்கி மக்களை அமைதிப்படுத்திவிடலாம் என்று அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை பல்வேறு வகையான பொருட்கள் சேவைகளுக்கான வரிகளில் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி எரிபொருளுக்கான சுங்கத் தீர்வையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கான தீர்வை லிட்டருக்கு 52 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது – இது இதுவரையில் 27 ரூபாவாக இருந்தது.
சுப்பர் டிசலுக்கான தீர்வை வரி லிட்டருக்கு 13 ரூபாவில் இருந்து 38 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சிகரட் மற்றும் மதுபான வகைகளின் விலைகள் வரித்திருத்தத்துக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தீர்வைக்கு ஏற்பட அதன் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு இன்னும் அரசாங்கத்தினால் வெளியாக்கப்படவில்லை.
எனினும் சுழற்சி அடிப்படையில் அமுலாக்கப்பட்டு வரும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடுத்த சுழற்சி இந்த மாதம் 15ம் திகதி அமுலாக்கப்படும்.
இதன்போது இந்த விலையேற்றம் அமுலுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.
-End-