7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களுடன் தடுமாறும் அயர்லாந்து

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

காலி சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இலங்கை, 6 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் துடுப்பாட்டத்தை டிக்ளே செய்தது.

இலங்கை அணி சார்பில் இந்த இன்னிங்ஸில் மொத்தம் நான்கு வீரர்கள் சதம் பெற்றனர்.

அதன்படி அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 140 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து, இலங்கையின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது.

இறுதியாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக ஜேம்ஸ் மெக்கல்லம் 35 ஓட்டங்களையும் மற்றும் ஹாரி டெக்டர் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அயர்லாந்து 474 ஓட்டங்களினால் பின் தங்கிய நிலையில் உள்ளது.

TSN