வெப்பமான காலநிலை குறித்து லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் எச்சரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

தற்போதைய வெப்பமான காலநிலையினை கருத்திற் கொண்டு, பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு, லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், நீர்வற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு அதிகளவான நீர் ஆகாரத்தினை எடுத்துக் கொள்வதற்கான முக்கியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கடும் வெப்பத்தின் போது மக்கள் போதுமான சத்துக்கள் கொண்ட திரவங்களை அதிக அளவில் பருக வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இக் காலப் பகுதியில் சிறுவர்களின் உடல் நலம் குறித்தும் வலியுறுத்திய அவர், சிறுவர்களுக்கு அதிக நீர் மற்றும் இளநீர், தோடம்பழ பான வகைகள் ஆகியவற்றை பருகுவதற்கு வழங்கவும் பரிந்துரைத்துள்ளார்.

அதிக வெப்பமான காலப் பகுதியில் வெளியில் சுற்றுவது கடுமையான உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.