SLvAFG மூன்றாவது ஒருநாள் ; ஆப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

11 months ago
SPORTS
aivarree.com

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த தொடரில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

பின்னர் இரண்டாவது போட்டியில் இலங்கை 132 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடர் 1:1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.

இந்நிலையில் தொடர் யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 22.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபடியாக மொஹமட் நபி 23 ஓட்டங்களையும், இப்ராஹிம் சத்ரான் 22 ஓட்டங்களையும், குல்பாடின் நைப் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளையும், வர்னிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் மற்றும் மகேஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்காக 117 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலகுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்த நிலையில் 120 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 34 பந்துகளில் 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கை வசம் ஆனது.

போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீர தெரிவானார்.