எரிபொருள் தட்டுப்பாடா? | அமைச்சரின் விசேட அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் பெட்ரோலிய ஊழியர்களை அவர்களது கடமைகளுக்குச் செல்வதை வலுக்கட்டாயமாகத் தடுத்ததால் எரிபொருள் விநியோகம் தாமதமானது என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். 

எனினும் களஞ்சியசாலைகள் மற்றும் விநியோக நடவடிக்களைகள் பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் பாதுகாப்புடன் இயல்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.  

போதியளவு கையிருப்பு இருப்பதாலும் விநியோகம் வழமை போன்று தொடரும் என்பதாலும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அச்சமடைய வேண்டாம் என அமைச்சர் கோரியுள்ளார். 


உதிரித் தகவல்

நாட்டின் பல இடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிசைகளை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் சரியாக இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எரிபொருள் விலை குறையும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு நட்டம் ஏற்படுமாக இருந்தால் அதனை சரி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அமுலாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


தற்போதைய நிலைமையில் எரிபொருள் விலையை 120 ரூபாவால் குறைக்க முடியும் என்று, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கமான சமகி ஐக்கிய தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து 50 ரூபாய் மட்டும் விலைக்குறைப்பு செய்யப்பட்டால் அது சுரண்டலாகும்.

இலங்கையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், நிச்சயமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

மக்கள் உணரக்கூடிய அளவுக்கு விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாராளுமன்றில் வைத்து பல தடவைகள் தெரிவித்திருந்தார்.