பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட ராஜகுமாரியின் மர்ம மரணம்

11 months ago
Sri Lanka
aivarree.com

ராஜகுமாரியின் மர்ம மரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு இன்று தெரிவித்தது.

பதுளை – தெம்மோதரை பகுதியைச் சேர்ந்த குறித்த 42 வயதான பெண், கொழும்பில் நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்துள்ளார்.

இம்மாதம் 11ம் திகதி சுதர்மா நெத்திகுமாரவின் இல்லத்தில் இருந்த தங்க நகையொன்று காணாமல் போய் இருப்பதாக தெரிவித்து, அவர் மீது குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டார்.

வெலிக்கடை காவல்நிலையத்திற்கு அவர் விசாரணைக்காக அழைத்துவந்த பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர் காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமையே இந்த மரணத்துக்கான காரணம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதும், காவல்துறையினர் அதனை மறுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இது குறித்து காவல்துறை மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் விசேட குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி சம்பவ தினத்தன்று வெலிக்கடை காவல்நிலையத்தில் கடமையில் இருந்து நான்கு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் இருவர் பெண் காவல்துறை அதிகாரிகளாவர்.

அதேநேரம் இந்த சம்பவம் குறித்த விசாரணையை நடத்துகின்ற பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று இது சம்மந்தமான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க இந்த சம்பவம் குறித்து இன்று பாராளுமன்றிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், இது குறித்து பிரச்சினையை எழுப்பி இருந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும், எனவே அவசரஅவசரமாக புதைக்கப்பட்ட அவரது சடலத்தை தோண்டியெடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய அதிகாரிகள் ஊடாக மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் மனோகணேசன் கோரிக்கை விடுத்தார்.


இந்த கோரிக்கையை அவர் முன்வைத்த போது ஆளும் கட்சியின் சிலர் கூச்சல் எழுப்புவதையும் காணக்கூடியதாக இருந்தது.
எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து முழுமையான நீதியான விசாரணை நடத்தப்படும் என்று தாம் உறுதியளிப்பதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம் மனோகணேசனின் இந்த கோரிக்கைக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவர் கருத்து தெரிவிக்கும் போது, காவல் நிலையத்தில் வைத்து சுதர்மா நெத்திகுமாரவின் கண் முன்னாலேயே ராஜகுமாரி தாக்கப்பட்டதாகவும், அதனை சுதர்மா தொலைபேசியில் தமது நண்பர் ஒருவருக்கு அப்போதே தெரிவித்ததாகவும் விமல் வீரவச குறிப்பிட்டார்.


எனவே இந்த விடயத்தை இலகுவாக விடக்கூடாது என்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதுதொடர்பாக ஆதரவான கருத்தை வெளியிட்டதுடன், இந்த கோரிக்கை நியாயமானது என்றும் சுயாதீனமான விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.