ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் குறித்து மஹிந்த தேசப்பிரிய கணிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் மாத்திரமே நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கணித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி தனது முதல் பதவிக்காலம் தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர், புதிய ஆணையைப் பெறுவதற்காக ஜனாதிபதித் தேர்தலை எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும்.

தற்போதைய ஜனாதிபதி பதவிக்காலம் நான்கு வருடங்கள் நிறைவடைந்த பின்னர் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற ஊகத்தை இது தூண்டியுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் மீதமிருந்த பதவிக் காலத்தை நிறைவேற்றுவதற்காக தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவசரத் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்காது எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சில சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட வாதங்களை முன்வைக்கும் நிலையில், அது தொடர்பில் முறையான விளக்கத்தைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றை நாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.