Update | எரிபொருள் விநியோகத்தின் தற்போதைய நிலை | அமைச்சரின் அப்டேட்

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையத்திலிருந்து 208 பவுசர்கள் வழமையான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்துள்ளன.

அதன்படி குறித்த காலப் பகுதியில் 86 பவுசர்களூடாக 6,600 லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

122 பவுசர்களூடாக ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6,600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.


பின்னணி

கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் புதன்கிழமை (29) காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்பு தெரிவித்திருந்தார்.

அவ்வாறான எரிபொருள் விநியோக செயல்முறையானது இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சில எரிபொருள் நிலையங்கள் ஏப்ரலில் எரிபொருள் விலை குறைவடையலாம் என்ற எதிர்பார்ப்பில் புதிய முன் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், எரிபொருள் விநியோகம் எவ்வித சிக்கல்களும் இன்றி தொடர்வதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர்களும் புதன்கிழமை (29) காலை முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.

எரிபொருள் விநியோக செல்முறையை சீர்குலைத்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை கட்டாய விடுவிப்பில் அனுப்புவதற்கு CPC முடிவு செய்துள்ளது மற்றும் அவர்கள் CPC மற்றும் சேமிப்பு முனையங்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டாலும், நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிய வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும், ஏனைய ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சீர்குலைக்கும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் அல்லது ஊழியர்களுக்கு எதிராக தேவையான எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும், பணிநீக்கம் தொடர்பில் பரிசீலிக்க தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு CPC மற்றும் CPSTL தலைவர்களுக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களை பலவந்தமாக பணிக்கு வருமாறு பொலிஸாரும் இராணுவத்தினரும் அழைப்பு விடுத்ததாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.