பல அமைச்சர்கள் அச்சத்தில் | மொட்டு கட்சியில் பெரும் பிளவு | அலசல்

1 year ago
(105 views)

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாடல்களும் அரசியல் அரங்கில் பதிவாகின்றன.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியிருந்தாலும், அவை ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.

மாகாண சபைத் தேர்தல் குறித்த பேச்சே இல்லை.

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலைமை தொடர்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தபடியாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியவந்தவண்ணம் இருக்கின்றன.

இதனை பல்வேறு தரப்பினரும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.

அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரியான நூலெண்ட், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்றும் அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்றும் அறிவித்திருந்தார்.

இதனை பல்வேறு அரசியல்வாதிகளும் தெரிவித்து வரும் நிலையில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதாகவும், அதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தாம் போட்டியிடவிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

ஆனால் இதற்கு அந்த கட்சியில் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்பதும், இந்தவிடயத்தில் கட்சி பிளவடைந்து கிடக்கிறது என்பதும் வேறு விடயங்கள்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த பின்னணியில், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய சகல இயலுமையும் நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே இருக்கிறது என்று மொட்டுக் கட்சியின் முக்கியஸ்த்தரிடம் இருந்தே நேற்று சாட்சியம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் கஞ்சன விஜயசேகர இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கியிருந்த பெரும் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணிலின் வழிநடத்தல் முக்கியமான இருந்தது.

அவரால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

அவரே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற நிலைப்பாடு பொதுஜன பெரமுனவில் அதிகரித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது அந்த கட்சியின் சில தரப்பினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கியமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் பசில் ராஜபக்ஷ இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கான அடிமட்ட வேலைத்திட்டங்களை பசில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள், ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், தற்போது அந்த கட்சியில் இருந்து பசில் மட்டுமல்ல, வேறெவரும் ஜனாதிபதியாக முடியாதோ என்ற கேள்வி சிலரிடம் எழுந்துள்ளது.

இந்தவிடயம் தற்போது கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருந்த இந்த விரிசல் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ரணிலைக் காட்டிலும் சிறந்த பலர் ஜனாதிபதியாவதற்கான தகுதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள பல பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

அத்துடன் தற்போது அமைச்சர்களாக இருக்கின்ற பலரும் ரணிலுடன் நல்லுறவை பேணி வருகின்றனர்.

ஆனால் முன்னாள் அமைச்சர்களாக இருந்து தற்போது அமைச்சர்களாக பதவிபெற முடியாதுள்ள மொட்டுக் கட்சி முக்கிஸ்த்தர்கள் பலர் ஜனாதிபதியுடன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறானவர்களில் ரோஹித்த அபேகுணவர்தன், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.

அவ்வாறான குழுவினரே, நாமல் தலைமையில் எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் தீர்மானித்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த விடயத்திலும் அவர்கள் மத்தியில் போதிய இணக்கப்பாடு ஏற்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக கடந்த சில நாட்களாக மீண்டும் செய்திகள் அடிபட்டுவருகின்றன.

உண்மையில் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்கிறார்கள் என்பதன் அர்த்தம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பலப்படுத்துதல் என்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி நினைத்தால் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அரசியல் யாப்பிற்கு அமைய மார்ச் மாதத்துடன் அவருக்கு அந்த அதிகாரம் கிடைத்துள்ளது.

இப்போது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பலர் ரணிலுடன் இணைந்துக் கொள்ளும் விடயத்தில் ஆளும் கட்சியின் பல உறுப்பினர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது.

தங்களுக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் முக்கியமான சில அமைச்சர்களே இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அமைச்சர்களாக இருக்கின்ற பலரின் செயற்பாடுகளில் ஜனாதிபதி அதிருப்தி கொண்டிருப்பதாகவும், அவர்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து திறனற்று செயற்பட்டவர்களை மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்திருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.

ஜனாதிபதி, இன்னும் சில அமைச்சர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு அரசியல் யாப்பின் படி இருந்தாலும், அதனை மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்காமல் வைத்திருப்பதன் நோக்கம், எதிர்க்கட்சியில் இருந்து சிலரை தம்பக்கம் ஈர்த்து தம்மை வலுப்படுத்திக் கொள்ளவே என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அப்படியான ஒரு நிலைமையில்தான் தற்போது ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமதுங்க, கபீர் ஹசீம் போன்றவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியால் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் காரணமாக அவருக்கு எஞ்சி இருந்த பதவிக்காலத்தில் சேவையாற்றுவதற்காக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய பதவிக்காலம் நிறைவடையும் வரையில் புதிய ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என மகிந்த தேசப்பிரிய கருதுகிறார்.

எனினும் இது சம்மந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Show full article

Leave a Reply

Your email address will not be published.