தோல்வியின் பின்னர் இந்திய அணியில் மாற்றங்களா?

1 year ago
(196 views)
  • இந்திய கிரிக்கட் அணிக்கு புதிய தலைவரா?
  • படுதோல்வியின் பின் கொதித்துப் போன இரசிகர்கள்
  • 2011க்குப் பின்னர் இந்தியாவின் நிலை

20க்கு20 கிரிக்கட் உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியமையானது, இந்திய கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் 10 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியுற்றமையானது, பெரும் விமசர்னத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

2011ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய கிரிக்கட் அணி எந்தவொரு பெரிய தொடர்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை.

இந்த காலப்பகுதியில் விளையாடிய பெரியத் தொடர்களில் ஒரு இறுதிப் போட்டி தோல்வியையும் 4 அரையிறுதி சுற்றுத் தோல்விகளையும் இந்தியா சந்தித்துள்ளது.

இந்தநிலையிலேயே இங்கிலாந்துடன் இடம்பெற்ற 20க்கு20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதி போட்டியிலும் இந்தியா படுதோல்வி கண்டிருக்கிறது.

இந்த தோல்விக்குப் பின்னர் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பல முன்னாள் கிரிக்கட் வீரர்களும் கிரிக்கட் விமர்சகர்களும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் தொடர்பாகவும் தலைமைத்துவம் தொடர்பாகவும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ரோஹித் சர்மா தலைமைத்துவத்தை ஏற்றதிலிருந்து எத்தனை போட்டிகளில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடி இருக்கிறார்?

காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் இந்தியாவின் பல தொடர்களில் பங்கேற்கவில்லை.

பல தடவைகள் பயிற்சிகளில் பங்கேற்றிருக்கவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில் அவரால் எப்படி ஒரு அணியை வழிநடத்தி உலகக்கிண்ணத் தொடருக்கு தயார்ப்படுத்த முடியும் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

முன்னாள் கிரிக்கட் வீரர்களான அஜய் ஜடேஜா, வசிம் அக்ரம், உள்ளிட்ட பலர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியில் தலைமைத்துவம் மாறப்போகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2023ம் ஆண்டு ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட சில முக்கியத் தொடர்கள் இடம்பெறவுள்ளன.

ஆசியக் கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலiயில் அதில் இந்தியா பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்திய அணியின் தலைமைத்துவம் குறித்த கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்வியை முதலில் எழுப்பியவர் இந்தியாவின் முன்னாள் தலைவர், சுனில் கவாஸ்கர்.

இந்திய அணியின் 30 வயதைக் கடந்த பல வீரர்கள் தங்களது ஓய்வு குறித்துச் சிந்திப்பதாகவும், ரோஹித் சர்மா பதவி விலகியதும், புதிய தலைவராக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட வேண்டும் என்றும் சுனில்கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் உத்தியோக பூர்வ அறிவிப்புகள் எவையும் வெளியாகவில்லை.

உடனடியாக அணித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்பது தொடர்பான நம்பகமான விபரங்கள் எவையும் இன்னும் வெளியாகவும் இல்லை.

எவ்வாறாயினும் இந்திய கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த விடயம் குறித்து பெரிய விவாதம் இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக ஐ.பி.எல். போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

ஐ.பி.எல். காரணமாகவே இந்தியத் தேசிய அணியின் வீரர்கள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் போதிய அவதானத்தைச் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால் #BoycottIPL என்ற ஹேஸ்டெக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளதையும் குறிப்பிடப்பட வேண்டும்.

Show full article

Leave a Reply

Your email address will not be published.