பாராளுமன்றத்தை கலைக்க பிரேரணை? தேக்க நிலைக்கு சென்றது பொருளாதாரம்

2 years ago
(305 views)

இலங்கை தற்போது பொருளாதார தேக்க நிலையில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார தேக்கநிலை என்பது பொருளாதார நெருக்கடியை காட்டிலும் மோசமான நிலையாகும். இங்கு பொருளாதார வளர்ச்சி என்பதே இருக்காது. வேலை வாய்ப்பு இன்மை, மக்கள் மத்தியில் அமைதியின்மை என்பன அதிகரிக்கும். மிகப்பெரிய பஞ்ச காலம் ஒன்று உருவாகும் சாத்தியங்கள் கூட இருக்கின்றன. மக்கள் இப்போது சிலவேளை உணவுகளைத் தவிர்த்தே வாழ்கின்றனர்.

இலங்கை தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற வகையிலான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்களை அதிகளவில் பொது வெளியில் மக்கள் வெளியிட்டு வருகிறார்கள். நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளில் அரசாங்கத்துக்கு எதிராக பேசுகின்ற மக்கள் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய அரசாங்கம், சரியான வழியில் பயணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. முறையான பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மோசமான கடன்களைப் பெற்று நாட்டை இன்னும் பாதாளத்துக்குள் தள்ளும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கை 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன் தொகையை மீள செலுத்த வேண்டியுள்ள போதும், இன்னும் 4 பில்லியன் கடனை சீனாவிடம் இருந்து கோரியுள்ளது. இந்த கடன்களைத் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் போது நாட்டின் பொருளாதார நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்கவே பயமாக இருக்கிறது அல்லவா?

அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள், அரசாங்கத்துக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. முக்கியமாக சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுத்தமையை உதாரணமாகக் கூறலாம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2015ம் ஆண்டு மகிந்த அரசாங்கம் தோற்றதிலிருந்து, அவருடனேயே பயணித்து வந்தது. அரசாங்கத்தின் எந்த தீர்மானத்தையும் எதிர்க்காத ஒரு கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களிலிருந்து வந்திருக்கிறது. தற்போது இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதானது அரசாங்கம் மீது கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

அது அவ்வாறிருக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்தல் தற்போது அதிகரித்திருப்பதாகக் கட்சியின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது அநேகமான உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாகக் காங்கிரஸின் தலைமை உறுதியான முடிவொன்றை அறிவிக்கவில்லை. கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்குமாக இருந்தால், ஆளும் கூட்டணியிலிருந்து விலகுகின்ற முதலாவது சிறுபான்மை கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமையும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மந்தமான செயற்பாட்டையே சஜித் அணி மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. ஆட்சி மாற்றம் தானாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அந்த கட்சி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல் ஒன்றின் ஊடாகவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகச் செவ்வி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைப்பதன் ஊடாக அவ்வாறான தேர்தல் ஒன்றை நடத்த வைக்க முடியும். பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரும் யோசனை ஒன்றைக் கொண்டு வந்து, நிறைவேற்றுவதன் மூலம் அதனைப் புரிய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கத்தின் மீது பல உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதால், இவ்வாறான பிரேரணை ஒன்றை நிறைவேற்றிக் கொள்வது கடினமானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதில் எந்த அளவுக்கு தீவிரமாக சஜித் அணி செயற்படவுள்ளது? என்பது கேள்விக்குறிதான்.

Show full article

Leave a Reply

Your email address will not be published.