அனுரவுக்கு எதிரான சூழ்ச்சி? – ஆட்சியை தக்கவைக்க ஜனாதிபதி முயற்சியா?

3 months ago
Sri Lanka
aivarree.com

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாது செய்வதற்கான திடீர் முயற்சியொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது மிகப்பெரிய சூழ்ச்சியான செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்கிடையில் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முஸ்தீபுகளை ஜனாதிபதி ரணில் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து, ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

அவரால் அரசியல் யாப்பில் மாபெரும் திருத்தங்கள் எதனையும் செய்ய முடியாது என்று, ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஒரு செவ்வியில் தெரிவித்திருந்தார்.

எனினும் 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி கலந்தாலோசனை நடத்தி வருகிறார்.

இவை அனைத்தும் காலத்தை கடத்தும் செயற்பாடுகள் என்ற குற்றச்சாட்டுகளும் ஒரு பக்கம் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டு வருவதாகவும், அதனை தற்போது அவருக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவ்வாறான யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டால், அதனை முழுமையாக எதிர்க்கவிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இம்முறை நடத்தப்படவுள்ள தேர்தல்களில் முக்கிய முன்னேற்றத்தை காணக்கூடிய கட்சியாக இருக்கின்ற தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சூழ்ச்சியாகவே இது அமையும் என்று, அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கூறுகிறார்.

|நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாங்களே நீக்குவோம், திடீரென இப்போது அதற்கான முயற்சி எடுக்கப்படுதானது ஒரு சூழ்ச்சி மட்டுமே’ என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்ற கருத்தினையே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் தெரிவித்துள்ளது.

தற்போது அப்படியான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.

எனினும் சிறிலங்கா சுதந்திர கட்சி, இந்த விடயத்தில் இந்த யோசனைக்கு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைய நீக்குவதற்கான யோசனைக்கு ஆதரவளித்தாலும் கூட, ஜனாதிபதி ரணிலின் பதவிக் காலத்தை நீடிக்கும் எந்த யோசனைக்கும் ஆதரவளிக்க மாட்டோம் என்று சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில் 1972ம் ஆண்டு ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டது.

பின்னர் 1978ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அமுலாக்கப்பட்டது.

இலங்கையின் மொத்த நிறைவேற்ற அதிகார பலம் பொருந்திய தலைமையாளராக ஜனாதிபதிக்கு அரசியல்யாப்பின் ஊடாக அந்தஸ்தளிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறையை நீக்குவதாக பல ஜனாதிபதிகள் கருத்து தெரிவித்திருந்த போதும், அதனை யாரும் அமுலாக்கவில்லை.

19ம் 20ம் திருத்தச் சட்டங்கள் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.