ஹசரங்கவை முந்தி முதலிடம் பிடித்தார் ரஷித்

1 year ago
SPORTS
aivarree.com

ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து ஜாம்பவானான ரஷித் கான் மீண்டும் ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

குறித்த தரவரிசையில் 24 வயதான ரஷித் கான் முதன் முறையாக 2018 ஆம் ஆண்டில் முதலிடம் பிடித்திருந்தார்.

வலது கை சுழற்பந்து மற்றும் துடுப்பாட்ட வீரரான ரஷித் கான் ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று டி:20 போட்டிகளிலும் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் மொத்தமாக 710 புள்ளிகளுடன் வனிந்து ஹசரங்கவை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்தார்.

மேலும் ரஷித் கானின் சக வீரரான ஃபசல்ஹக் ஃபரூக்கி இந்த தொடரில் 4.75 என்ற சராசரியுடன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் இடது கை வேகப் பந்து வீச்சாளரான ஃபரூக்கி தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 12 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்துக்கு வந்தார்.

அது மாத்திரமல்லாமல் குறித்த தரவரிசையில் இன்னுமோர் ஆப்கானிஸ்தான் வீரரான முஜீபூர் ரஹ்மான் 668 புள்ளிகளுடன் எட்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

பாகிஸ்தானுடனான தொடரில் அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இருதரப்பு டி:20 தொடரில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானைத் தோற்கடித்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TSN