வெளியாகவுள்ள மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு | சூடுபிடித்த பங்குச் சந்தை

11 months ago
aivarree.com

கொழும்பு பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவு நிலையிலேயே இருந்து வந்தது.


கடந்த 3 மாதங்களில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்ற போதும், பங்குச் சந்தை நடவடிக்கைகள் சரிவு தன்மையிலேயே இடம்பெற்றிருந்தன.

இதற்கான பிரதான காரணம் பங்குச் சந்தையில் உருவாகி இருந்த எதிர்மறை நிலைப்பாடு என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை

வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இன்னும் அந்த பணிகள் நிறவடையவில்லை.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அது நிறைவடையும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பருக்குள் அது நிறைவடையாவிட்டால், நாடு சிக்கலை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.

இந்த தகவலின் தெளிவற்றத் தன்மையால், அதுகுறித்த அச்சம் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், அது பங்குச் சந்தையையும் வியாபித்துக் கொண்டது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் அதனை மறுத்து வருவதுடன், மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட பிணை முறிகள் தொடர்பான மறுசீரமைப்பு மட்டுமே செய்யப்படும் என்று விளக்கம் தந்துள்ளது.

எனினும் இதுகுறித்த தெளிவற்ற நிலைமை தொடர்வதன் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை சரிவடைந்து வந்தது.

பங்குச் சந்தையின் திடீர் வளர்ச்சி

எவ்வாறாயினும் இன்றைய தினம் பங்குச் சந்தையில் திடீர் வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. இன்று நண்பகல் வரையில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் மற்றும் எஸ்.எண்ட்.பி சிறிலங்கா 20 விலைச்சுட்டெண் என்பன குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்தன.

மேலும் இன்று மதியம் வரையில் 187 மில்லியன் ரூபாய் மொத்தப் புரள்வாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கான பிரதானமான இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்ற விசேட அறிவிப்பு, அடுத்தது பணவீக்க வீத மாற்றம்.

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நாளைய தினம் கூடவுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதம் முதலாம் திகதி மத்திய வங்கியின் நாணய சபை ஒன்று கூடி, இதுதொடாபான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது துணை நில் வைப்பு வட்டிவீதம் (வசதி) 15.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதம் 16.50 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டில் பணவீக்கம் குறைந்து வருகின்ற நிலையில், வட்டி வீதங்கள் கடந்த ஏப்ரல் மாதமே குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் அப்போது வட்டிவீதம் குறைக்கப்படாமல் அவ்வாறே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை குறைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் இரண்டு வட்டி வீதங்களும் 100 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக அய்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

பணவீக்கத்தின் சரிவு

அதேபோல மே மாதத்துக்கான பணவீக்கம் பெருமளவில் குறைவடையும் சாத்தியங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான 2023 ஏப்ரல் மாதத்துக்கான பிரதான பண வீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளது.

குறித்த பண வீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக பதிவாகியிருந்தது.

மார்ச் மாதத்தில் 47.6 சதவீதமாக இருந்த உணவு பண வீக்கம், ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக குறைந்திருந்தது.

இது இந்த மாதம் இன்னும் குறைவடையும் சாத்தியம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு காரணங்களும் கொழும்பு பங்குச் சந்தையில் நேர்மறையான நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது இன்றைய தினம் வளர்ச்சியை காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.