ஆறாம் தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா

1 year ago
SPORTS
aivarree.com

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் க்ரோசியா ஆகிய அணிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டு அணிகளுமே சம பலத்துடன் மோதியிருந்தன.

போட்டியின் போது க்ரோசியா அணி பந்தினை 61 சதவீத நேரம் தக்க வைத்திருந்தது.

எனினும் க்ரோசியாவால் இலக்கினை நோக்கி பந்தினை கொண்டு செல்ல முடியாதவாறு, ஆர்ஜன்டீனா தடுத்திருந்தது.

ஆர்ஜன்டீனாவின் சார்பில் அல்வரிஸ் 39ஆம் மற்றும் 69ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டார்.

லியோனால் மெசி 34ம் நிமிடத்தில் தண்ட உதை மூலம் ஒரு கோலை போட்டார்.

இதன்மூலம் ஆர்ஜன்டீனாவின் சார்பில் உலகக்கிண்ண தொடரில் அதிக கோல்களை அடித்தவர் என்ற கேப்ரியல் பட்டிஸ்டாடாவின் சாதனையை மெசி முறியடித்துள்ளார்.

அதேநேரம் 1966ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே தொடரில் மூன்று தடவைகளுக்கு மேல் கோல் அடித்த மற்றும் துணை புரிந்த முதல் வீரர் என்ற சாதனையையும் மெசி நேற்று படைத்துள்ளார்.

ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன் இறுதி மூன்று தொடர்களில் இரண்டு தடவைகள் ஆர்ஜன்டீனா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அதிக தடவைகள் உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணியாக 8 தடவைகள் தகுதி பெற்றுள்ள ஜேர்மனி உள்ளது.

பிரேசிலும் ஆர்ஜன்டீனாவும் ஆறுதடவை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

அதேநேரம் உலகக்கிண்ண வரலாற்றில் 2 அரையிறுதி போட்டிகளில் 3க்கும் அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக ஆர்ஜன்டீனா உள்ளது.

இதற்கு முன்னர் 1930ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனா 6க்கு1 என்ற கோல் கணக்கில் அரையிறுதியில் வெற்றி பெற்றது.

ஜேர்மனியும் இதேபோன்ற இரண்டு தொடர்களின் அரையிறுதி போட்டிகளில் 3 கோல்களுக்கு மேல் வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் மெசியின் மெஜிக் மீண்டும் காண்பிக்கப்பட்டதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக இரண்டாம் பாதியில் கோல்களைப் போடுவதைவிட, அல்வெரிஸுக்கு கோல்களைப் போடுவதற்கு மெசி சிறப்பாக துணைபுரிந்திருந்தார்.

இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் மற்றும் மொரோகோ அணிகள் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மோதவுள்ளன.