கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டமைக்கு சிறீதரன் கண்டனம்

11 months ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரச புலனாய்வாளர்களினால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந் நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே வெளிக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இச் சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என்றும் அவர் கூறினார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்யை தினம் (02) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.