28 ஆவது ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு!

12 months ago
Sri Lanka
aivarree.com

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும்.

காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்பாட்டில் (UNFCCC) இணைந்துள்ள உறுப்பு நாடுகளிடையே, காலநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்களை வழிநடத்துவதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.