விமலின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

1 year ago
Sri Lanka
aivarree.com

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியொன்றில் (ஏப்ரல் 26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் விமல் வீரவன்ச,

2022 ஆம் ஆண்டு மே 09 அன்று நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டம் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியையும் பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து படுகொலை செய்வதே என்றும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்திய விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் விமல் வீரவன்சவின் மேற்படி கருத்து அடிப்படையற்றது என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அப்போதைய இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.