வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை கண்டனம்

1 year ago
Sri Lanka
aivarree.com

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொடவை கறுப்புப் பட்டியலில் இணைத்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிடம் இந்த தீர்மானம் தொடர்பான இலங்கையின் பாரதூரமான கவலைகளை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் நீண்டகால இருதரப்பு பங்காளி என்ற வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைபட்சமான நடவடிக்கையானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானதாகும்.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் இலங்கை தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.