தனது வாழ்வில் முதல்முறையாக திறந்த வானத்தை பார்த்து அதிசயித்த சிம்பன்சி

10 months ago
World
aivarree.com

தனது வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 28 வயதான சிம்பன்சி ஒன்று, தனது வாழ்க்கையில் முதல்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தது.

வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய வீடான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், அதன்பின்னர், 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது.

2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்பையடுத்து, கலிபோர்னியாவின் மீன் மற்றும் வனவிலங்குத் துறையானது விலங்குகள் வாழ்வதற்கேற்ற புதிய வீடுகளைக் கண்டறிவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்தாண்டு, புளோரிடா மாகாணத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு வனில்லா மற்றும் அந்த சிம்பன்சி குழுவில் இருந்த விலங்குகளும் கொண்டு செல்லப்பட்டது.