சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் | தரவேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

6 months ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மே மாதம் 29ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரையில் நடைபெற்றிருந்தன.

இந்த பரீட்சைகளில் நான்கு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து மூன்று பேர் தோற்றியிருந்தனர்.

இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மிக மிகத் தாமதமாகவே நடைபெற்றிருந்தது.

அந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாகவும், பரீட்சை கொடுப்பனவு தொடர்பான போராட்டங்கள் காரணமாகவும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் மாதம் வரையில் நடைபெற்றிருக்கவில்லை.

கடந்த மே மாதம் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் திருத்தப் பணிகளும் ஆகஸ்ட் மாதமே ஆரம்பமாகின.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்குக் கருத்து தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர, புதிய தகவல்களை வழங்கியுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆகஸ்ட் மாதமே நடைபெற்றிருந்தாக பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.

எவ்வாறாயினும் இந்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் தரவுத் தளத்தில் தரவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தரவுகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இம்மாத இறுதிக்குள், சொன்னபடி பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியுமா? என்பது பற்றி அவர் உறுதியாக எதனையும் சொல்லவில்லை.

இதேவேளைக் கல்வி அமைச்சின் தகவல்படி, இந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரகாலமேனும் செல்லும் என்று அறியமுடிகிறது.