வளர்ச்சியை நோக்கி நகரும் இலங்கை தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம்

1 week ago
aivarree.com

இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வௌியிட்ட அறிக்கையின் படி வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றமானது இந்த ஆண்டு மே மாதத்தில் 544.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மே மாதத்திற்காக புள்ளிவிபரங்கள் 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணம் அனுப்பிய தொகை 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 11.8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வௌிநாட்டு தொழிலாளர்களின் ஜனவரி மாத பணப்பரிமாற்றமானது 488 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 437 மில்லியன் அமெரிக்க டொலர்களாவே இருந்துள்ளது

இதேவேளை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்ரவரியில் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வெளிநாட்டுப் பணம் அனுப்புவதில் 16% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மார்ச் மாதத்தில், இலங்கை தொழிலாளர்களின் பணப்பரிமாற்றமானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில், இலங்கை தொழிலாளர்களின் பணப்பரிமாற்றமானது 543.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது, இது 2023 இன் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 19.7% அதிகரிப்பைக் குறிக்கிறது.

வௌிநாடுகளில் உள்ள அநேகமான இலங்கையர்கள் உத்தியோகபூர்வ வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.