PTA யின் கீழ் 46 நபர்கள் மாத்திரம் தடுத்து வைப்பு – இராஜாங்க அமைச்சர்

12 months ago
Sri Lanka
aivarree.com

பயங்கரவாத தடை சடத்தின் (PTA) கீழ், தற்சமயம் 46 நபர்கள் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

இதன்படி, 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இன்று பாராளுமன்றில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் 14 வருடங்களுக்கும் மேலாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ல் நிர்மலநாதன் இதன்போது வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் சிலரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தற்போது 22 பேரே சிறைச்சாலைகளில் இருப்பதாகவும் கூறினார்.