அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் வரி – அபராதம் என்ன?

4 weeks ago
aivarree.com

இலங்கையின் நிதியமைச்சினால் 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், தங்களுக்கான TIN என்று அழைக்கப்படும் வரி இலக்கத்தை பதிவு செய்யாதிருந்தால், பெப்ரவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் இந்த அறிவிப்பு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.


அதற்குப் பதிலாக தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஊடகச் செயலாளர் , பெத்தும் பாஸ்குவேல் கூறியதாவது:

‘இது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, ஆள் பதிவுத் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவற்றின் தரவுத்தளங்களில் இருந்து வரி இலக்கத்தை மாற்ற முடிவு செய்துள்ளது.


அதன்படி, 90சதவீதம் இந்த கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதால், மக்கள் அபராதம் அல்லது தண்டனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்’ என்று அவர் கூறினார்.

தேசிய அடையாள அட்டை அடிப்படையிலான வரி இலக்கமானது மிகவிரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுத்தளங்கள் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக முகாமை தகவல் கட்டமைப்புக்கு தரவுகள் மாற்றப்பட்டதன் பின்னர் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

இருப்பினும், அடையாள அட்டை வைத்துள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் ஏற்படாது.


மாறாக, பல்வேறு அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் ஏராளமான சேவைகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் தனிநபர்களுக்கு வசதியாக அணுக வாய்ப்பு ஏற்படும்.

தேவைப்படும்போது வரி செலுத்துவோருக்கான சலுகைகள் வழங்கப்படும்.


இந்த முறையானது வரி ஏய்ப்பை திறம்பட குறைக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே சமயம், ஏழை மற்றும் நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மறைமுக வரிகளுக்கு பதிலாக நேரடி வரிகள் மூலம் அரசின் வருவாயை மேம்படுத்த வேண்டும்.

‘தனிப்பட்ட வருமான வரிகள் அரசு வருவாய் ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பயனுள்ள மறுபங்கீடு மூலம் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்கின்றன. இலங்கையில், வருமான வரி வருவாய் நிலையான சரிவைச் சந்தித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்தில் இலிருந்து 2022 இல் 0.2 சதவீதமாக வருமான வரி வருவாய் குறைந்துள்ளது – இதேபோன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை விட இது குறைவாக உள்ளது’ என்று இலங்கை இளம் தொழில்முனைவோர் சங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி த மோர்னிங்