குழப்பத்தில் முடிந்த தமன்னாவின் களியாட்ட நிகழ்ச்சி

3 months ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணத்தில் நடிகை ரம்பாவின் கணவரால் நடத்தப்படும் கல்லூரி ஒன்று, இசை நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்திருந்தது. 

9ஆம் திகதி இரவு நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன், ஸ்வேதா மோஹன் உள்ளிட்டவர்களுடன், நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஸ், சிவா போன்றோரும், பாலா, புகழ் போன்றவர்களும் இன்னும் பல பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஆரம்பம் முதலே சர்ச்சைகள் எழுந்திருந்தன. 

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக 30,000 ரூபாய் டிக்கெட் அறவிட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகச் சர்ச்சைகள் பேசப்பட்டன. 

 அத்துடன் இந்நிகழ்ச்சிக்காகப் பல பிரபலங்கள் யாழ்ப்பாணத்துக்கு வர விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களைக் கட்டாயப்படுத்தி யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்ததாகவும் இந்த கல்லூரியினுடைய தலைவர் நடிகர் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்திருந்த கருத்தும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

 கட்டணம் அறவிட்டு நடத்தப்பட்ட இசை  நிகழ்ச்சியில் இலவசமாகக் கலந்து கொள்வதற்கும் மக்களுக்கு பின் வரிசையில் களம் ஒதுக்கப்பட்டது. 

நிகழ்ச்சி தொடர்பாகக் கிடைக்கப் பெறுகின்ற தகவல்கள் படி இலவசப் பிரிவில் கலந்து கொண்டிருந்த தரப்பினர் மத்தியிலேயே குழப்பம் ஆரம்பித்திருந்ததாக அறிய முடிகிறது. 

இதற்குக் காரணம் அங்கு நின்றிருந்தவர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் முறைகேடாக நடத்தப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

 இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட பதட்ட நிலையின் போது நிகழ்ச்சியைக் காண வந்த பலர்  தாக்கப்பட்டதையும் காணொளிகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

எவ்வாறாயினும் இறுதியில் ஒரு அளவுக்கு மேல் நிகழ்ச்சி கட்டுப்பாட்டை மீறிச் சென்ற நிலையில் அந்த நிகழ்ச்சியை இடைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. 

 இது தொடர்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்கள் யாரும் இன்னும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை இந்த இசை நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் கலைஞர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட அரசியல் கட்சியொன்று அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

நேற்றைய சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு எதுவும் பதிவானதாக இதுவரை தெரியவில்லை. 

அதே நேரம்,  கல்விக்குப் பெயர்பெற்ற யாழ்ப்பாணத்தில், இப்படியொரு களியாட்டத்தைக் காட்டி கல்விக்கு ஆள்சேர்க்ஜ முனைந்தது சரிதானா? என்ற வகையிலான விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன.