முழுமையாக நீங்கும் இறக்குமதி தடை | வாகன இறக்குமதி குறித்தும் அறிவிப்பு

10 months ago
aivarree.com

அந்நிய செலாவணி அற்றுப் போவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் 2020ம் ஆண்டு இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இந்த கட்டுப்பாடுகள் அண்மைக்காலமாகக் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டது.

எனினும் இன்னும் 500க்கும் அதிகமான பொருட்கள் மீதான தடை நீக்கப்படாதுள்ளது.

கொவிட் காலத்தில் ஏற்பட்டிருந்த பொருளாதார சரிவு, பின்னர் இருந்த அரசாங்கத்தின் சரியான நிர்வாகத்திறன் இன்மையினால் மேலும் பின்னடைவைச் சந்தித்திருந்தது.

இதனால் ஏற்பட்ட அந்நியசெலவாணி அல்லது வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பற்றாக்குறை காரணமாக, அதனைத் தேக்கிக் கொள்ளும் நோக்கில் இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டன.

இதன் ஊடாக அந்நிய செலாவணி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

அதே போல மொத்த வெளிநாட்டு ஒதுக்கமும் அதிகரித்திருக்கவில்லை. எனினும் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் முழுமையான கரைதல் நிலை ஓரளவுக்குத் தாமதப்படுத்தப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

2022ம் ஆண்டு ஏற்பட்ட அரசாங்கத்தின் ‘முகம்’ மாற்றத்தை அடுத்து, எடுக்கப்பட்ட சில முடிவுகளால் வெளிநாட்டு ஒதுக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் எடுத்த சில தீர்மானங்களின் விளைவாகப் பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்களால் காண்பிக்கப்படுகின்றன.

அதேநேரம் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றவர்களால் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற பணத்தின் அளவும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடான வருமானமும் மேலோங்கிச் செல்கிறது.

இதேவேளை இறக்குமதி தடையைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாது என்ற நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் விதித்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இறக்குமதி தடையைக் கட்டம் கட்டமாக நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து, பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள பொருட்கள் மீதான தடையையும் அரசாங்கம் செப்டம்பர் மாதத்துடன் நீக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக உள்நாட்டுத் துறை அதிகம் நன்மை பெறும் என்றும், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போட்டித் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்படியான பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் அது சாதமான விளைவை ஏற்படுத்தும் என்பதோடு, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தனித்துச் செயற்பட முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், வாகனங்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்ற விடயத்தையும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் வாகனங்களுக்கான இறக்குமதியை அனுமதிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.