முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒரு ரூபாயால் மட்டுமே குறைக்கலாம் | அதுவும் நடைமுறைக்கு வராது

11 months ago
aivarree.com

பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதும், முச்சக்கர வண்டிக்கான பயணக் கட்டணங்களை 1 ரூபாயினால் மட்டுமே குறைக்க முடியும் என்று, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போது, முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப பயண கட்டணத்தை 100 ரூபாயாக வரையறுக்கவும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 80 ரூபாவாக நிர்ணயிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய பொறிமுறை ஒன்றை செயற்படுத்த தவறிவிட்டனர்.

தற்போது பெற்றோல் விலை குறைந்திருந்தாலும், நாட்டில் விநியோகிக்கப்படுகின்ற பெற்றோல் தரமற்றதாக இருப்பதால், உச்ச தூரத்தை முச்சக்கர வண்டிகளால் செல்ல முடியாதுள்ளது.

அத்துடன் உதிரிப்பாகங்கள், டயர்கள் போன்றவற்றின் விலையேற்றத்தின் காரணமாக, முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒரு ரூபாவினால் மட்டுமே குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.