கடவுச் சீட்டு விநியோகத்தை இலகு படுத்தும் அரசு | பின்னணி என்ன?

11 months ago
Sri Lanka
aivarree.com

அண்மைக்காலமாகக் கடவுச் சீட்டு பெறும் நடவடிக்கைகளை இலகு படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கொவிட் காலத்தில் அமுலாக்கப்பட்ட முன்பதிவு அடிப்படையிலான கடவுச் சீட்டு விநியோகம் தொடர்ந்தும் அமுலிலிருந்து வந்தது.

இது அண்மையில் நீக்கப்பட்டிருந்த போதும் மீண்டும் அமுலாக்கப்பட்டு செயற்பாட்டிலிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த வாரம் முதல் இந்த முன்பதிவு முறைமையை நீக்குவதற்கு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேநேரம் கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

நீண்டகாலமாக இந்த விடயம் குறித்த செய்திகளும் விவாதங்களும் வெளியாக்கப்பட்டு வந்தன.

உலகில் அதிக பெறுமதியற்ற கடவுச் சீட்டுகளில் ஒன்றாக இலங்கையின் கடவுச் சீட்டும் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சவால்மிக்க பணி

கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வது என்பது மிகப்பெரிய சவால் மிக்க பணிகளில் ஒன்றாகவே இதுவரையில் இலங்கையிலிருந்து வந்துள்ளது.

ஆவணங்களின் கையளிப்பு, காத்திருப்பு, கட்டணம், அதிகாரிகளின் அலட்சியம் என்று பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தே கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிலைமை இருந்து வருகிறது. இன்னும் தொடர்கிறது.

இவ்வாறான நிலைமையில் குறித்த தடைகளைத் தளர்த்திக் கடவுச் சீட்டு பெறும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

புதிய நடைமுறை

அதன்படி அண்மையில் முன்பதிவு அடிப்படையிலான கடவுச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

புதிதாக டோக்கன் வழங்கப்பட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குச் செல்கின்ற அனைவருக்கும் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

இது, இணையத்தளத்தின் ஊடாகவே அல்லது தொலைப்பேசியின் ஊடாக அழைத்து முன்பதிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்குச் சிறந்த சலுகையாக அமைந்திருக்கிறது.

வீட்டிலிருந்தே கடவுச் சீட்டை பெறலாம்

இது இவ்வாறிருக்க அடுத்த மாதம் முதல் இணையத்தளம் ஊடாகவே கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இந்த அறிவிப்பானது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து விரிவான விளக்கங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

என்றாலும், குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்துக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தே இணையத்தளம் ஊடாக கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக வசதி ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அது பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை

இதன்படி விண்ணப்பங்களையும் அவற்றின் ஆவணங்களையும் இணையத்தளம் ஊடாக மென்னாவணங்களாக அனுப்பிவிட்டு, கைவிரல் அடையாளம் உள்ளிட்ட உயிரியல் தரவு வழங்கல் நடவடிக்கைகளுக்காகப் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.

இதற்காகப் பிரதேச செயலகங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கரணமாகக் கொழும்புக்கு வந்து பல நாட்களை வீணடித்துக் கடவுச் சீட்டுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை மாற்றமடையும்.

ஆனால் இது உரியத் திகதியில் அமுலுக்கு வருமா? என்பது குறித்து இன்னும் குடிவரவு திணைக்களம் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

3 நாட்களுக்குள் கடவுச் சீட்டு

அதேநேரம் 3 நாட்களுக்குள் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளைச் சேகரிக்கும் வகையில் மேலும் 50 இடங்களை இணைத்து இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆவணங்களும்

மேலும் ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய ஆவணங்களைக் குடிமக்கள் வசதியாகப் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட வசதியை நிறுவுவதற்கான திட்டங்களை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் நேற்று வெளிப்படுத்தினார்.

பொதுமக்களுக்கான ஆவணம் தொடர்பான சேவைகளை நெறிப்படுத்தும் அலுவலகமொன்றை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் அமைச்சர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.

எவரும் ஒரே கூரையின் கீழ் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்னும் இரண்டு மதம் அளவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்துக்குக் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டை மற்றும் பதிவாளர் நாயகத்தின் அலுவலகப் பிரிவும் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

காரணங்கள் என்ன?

இவ்வாறு கடவுச் சீட்டுகள் பெறுவதை இலகுபடுத்தும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்த அரச சேவைகளையும் விரைவாக பெற்றுக் கொள்ள வேண்டிய வகையிலான ஏற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியனதான்.

ஆனால் தற்போது இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு இரண்டு பிரதானமாக காரணங்கள் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்துக்கு தற்போது அதிக அந்நியசெலாவணி தேவைப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கத்துக்கு அதிக அந்நியசெலாவணியைப் பெற்றுத் தரும் துறையாக இருப்பது இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்களில் ஈடுபட்டும் பணம் அனுப்புவதாகவும்.

இந்த விடயத்தை ஊக்கப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகின்றவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளின் அதிகரிப்பு உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

எனவே விரைவாக கடவுச் சீட்டுகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு செல்வோரை ஊக்கப்படுத்து அரசாங்கத்தின் முதலாவது நோக்கமாகும்.

இரண்டாவது காரணம்

தற்போது அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீ;ள்வதற்காக அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறது.

அந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக அரசதுறை பணியாளர்களை ஆட்குறைப்பு செய்வதும் அடங்கும்.

அந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளவும் எதிர்பார்க்கிறது.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சேகரித்து துரிதமாக இந்த பணிகளை மேற்கொள்வதன் ஊடாக, தற்போது இருக்கின்ற அரச பணியாளர்கள் பலர் வேலைப் பளுவையும் வேலைத்திறனையும் கூட்ட முடியும் என்று அரசாங்கம் கருதுகிறது.

தற்போது பல அரச பணியாளர்கள் பல நேரங்களில் தங்களுக்கான பொறுப்புகளை சரியாக ஆற்றுவதில்லை, அதுவே பல்வேறு தாமதங்களுக்கும் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் அரச துறையை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில், அவர்களின் பொறுப்புகளை அதிகரிக்கவும், அநாவசியமான பணியாளர்களையும் நீக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும், இதற்கொரு காரணமாக கூறப்படுகிறது.