ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை | LIVE

3 weeks ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்றின் புதிய அமர்வு ஆரம்பத்தில், ஜனாதிபதி ரணில் தமது கொள்கை பிரகடன உரையை நிகழ்த்துகிறார்.

இதன்போது அவர் வெளியிட்ட முக்கியமான கருத்துகளை இந்த பக்கத்தில் காணலாம். 

இந்த பக்கம் நேரலையாக அப்டேட் செய்யப்படுவதால், புதிய தகவல்களை அறிய இந்த பக்கத்தை ரீஃப்ரெஸ் செய்யுங்கள். 


பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை

பொருளாதார மற்றும் விஞ்ஞான ரீதியான தீர்வுகளே உள்ளன.

நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை நோக்கி மாறும் வகையில் பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

அரசியல் அபிலாஷைகளை மனதில் வைத்துக்கொண்டு, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதன் மூலமோ அல்லது அழுது கண்ணீர் வடிப்பதனாலோ,  நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது. 

எதிர்கால இளைஞர்களுக்காக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலமே நாடு முன்நோக்கி நகர்த்த முடியும். 

_______________

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க சிறந்த மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள்.

அது தொடர்பில் கலந்துரையாட தாம் எப்போதும் தயாராக உள்ளேன். 

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தயாராக இருக்கிறேன். 

_______________

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேம். 

பொதுஜன பெரமுன ஒன்றிணைத்தது போன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, நாட்டுக்கான பொதுவான பயணத்தில் இணையுமாறு அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். 


பாதுகாப்பு நவீனமயமாக்கப்படும்

ஒரு தீவு நாடாக எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பாதுகாப்பு வலையமைப்புகளும் நவீனமயமாக்கப்படும். 

புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படைகள், தொழில்நுட்ப சாதனங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நவீனமயமாக்கப்படும். 

_______________

வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்படும். 

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 

சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறோம். 

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (R-SEP) இணையும் என்றும்  ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக விருப்பங்களின் பொதுவான முறையில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

மேல்மாகாணத்திற்கு வெளியே யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி போன்ற நகரங்களுக்கு பொருளாதாரத்தை விஸ்தரித்து, பொருளாதார சக்தியை விரிவுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே இந்தியாவுடன் திருகோணமலையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. 

_______________

கொழும்பு துறைமுக நகர் விசேட நிதி வலயமாக மாற்றப்படும். 

அந்த வலயத்தில் வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் நிறைவேற்றப்படும். 


காணிகளில் உயர் உற்பத்தி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்தும். 

முதலீட்டு பாதுகாப்பு

பாரியளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் எளிமையான செயற்பாட்டின் ஊடாக முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதுடன் ஊழல் மோசடிக்கான வாய்ப்புகளைத் தடுக்க முடியும். 

சர்வதேச தரத்தின் அடிப்படையில் தற்போதைய தேவைகளைப்  பூர்த்தி செய்யும் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஆணைக்குழுவின் ஊடாக பரந்தளவிலான முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் 

நலிவடைந்தோரை பாதுக்காக்க திட்டம்

விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதைப் போன்று,  ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கக் கூடிய வகையில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆழமான நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

சித்திபெறாத மாணவர்களுக்கான திட்டம்

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும்  உயர் கல்வியை வழங்க புதிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பதைப் போன்று, சாதாரண மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத சகல பிள்ளைகளுக்கும் தொழிற்கல்வி பெறும் வாய்ப்பும் வழங்கும் வகையில் தொழிற்கல்லூரிகள் நிறுவப்படும். 

பாகுபாடற்ற சட்ட அமுலாக்கம்

தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்த மூன்று நான்கு போகங்களில் உலர் வலயத்தில் விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க இம்மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பிரதேச செயலகத்தைத் தெரிவு செய்து விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும். 

அதன் ஊடாக ஈர வலயத்தில் உள்ள காணிகளை ஏனைய வர்த்தகப் பயிர்களுக்கு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். வரி சுமை குறைக்கப்படும் | வெற் வரியும் குறையும் 

2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு  2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அது 1,000,029 ஆக அதிகரித்துள்ளது. 

இது 130% அதிகரிப்பு. 

_______________

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி முன்னோக்கிச் செல்கையில் பொருளாதாரம் தொடர்ந்தும் ஸ்திரப்படும் நிலையில்,  வரிச்சுமை குறைக்கப்படும். 

அதேவேளை வற் வரியை திருத்துவதற்கான வாய்ப்பு  ஏற்படும். 

_______________

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த  எதிர்பார்க்கிறேன். 

அது நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அத்திவாரமாகவும், கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையில் திருப்புமுனையாகவும் அமையும். 

_______________

இந்த ஆண்டு 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஐ.எம்.எப்  உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கணித்துள்ளன. 

2025 ஆம் ஆண்டில் இதனை 5% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். 


பொருளாதார வளர்ச்சி தற்செயலானது அல்ல | ஜனாதிபதி

2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல்  முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. 

மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு முழுவதும் 4917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 

3 முதல் 5 வேலை நாட்களுக்குள் கொடுப்பனவுகளை துரிதமாக செலுத்தும் வேலைத்திட்டம் அமுலில் உள்ளது. 

அனைத்து மருத்துவ உதவிகளும் 50% இலிருந்து 100% ஆக அதிகரிக்கப்படும். 

இந்த ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இலாபமீட்டும் நிறுவனங்களாக மாறிய அரச நிறுவனங்கள்

2022ஆம் ஆண்டின் இறுதியில் 745 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்த பிரதான 52 அரச  நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் 313 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளன. 

வரவு செலவுத் திட்டத்தில் உபரியான உள்நாட்டு உற்பத்தி

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மைப் பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்த  முடிந்தது

இது சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் 6 ஆவது தடவையாக இலங்கையால் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது 1977க்கும் பின் இலங்கை படைத்த சாதனை | ஜனாதிபதி பெருமிதம்

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது