பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன உரிமக் கோரிக்கையை தாமதப்படுத்தும் ஜனாதிபதி?

2 months ago
Sri Lanka
aivarree.com

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

இருப்பினும் இது குறித்து ஜனாதிபதியிடம் இருந்து இதுவரை எதுவித பதிலும் வரவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன உரிமம் கோரி குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்ட குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்னர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதை சமகி ஜன பலவேகய கட்சி, கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பாராளுமன்ற அவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.