100 கமராக்களுக்கு முன் கேஎல் ராகுலை திட்டிய லக்னோ அணியின் உரிமையாளர்

1 week ago
SPORTS
aivarree.com

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுடன் மைதானத்திலேயே அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபமாக விவாதம் நடத்தியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்ததோடு, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 போட்டியில் லக்னோ அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வந்த லக்னோ அணி, இந்த சீசனில் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தது. இதற்காக புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரை கொண்டு வந்தது. ஆனால் லக்னோ அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணித் தலைவர் கே.எல் ராகுலுடன் கோபமாக பேசினார். ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியை சகித்து கொள்ள முடியாமல் 100 கமராக்களுக்கு முன்பாகவே கேஎல் ராகுலை காட்டமாக திட்ட தொடங்கினார்.

அவருக்கு பதில் சொல்ல முடியாமல் கேஎல் ராகுல் நின்றது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த உரிமையாளரும் எந்த அணித் தலைவரை களத்திலேயே திட்டியதில்லை எனவும் தெரவிக்கப்படுகின்றது.