தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு கம்பனிகளை போக சொல்ல வேண்டாம் – மனோ

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடிய வில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை அரச தலைவராக அவர் எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ​தெரிவித்துள்ளார்.

அரசில் உள்ள இதொகா உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் சோறு பொங்குவது ஆகிய சிறு விளையாட்டுகளை நிறுத்தி விட்டு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் எமது ஒத்துழைப்பையும் கேட்டால் நாம் சாதகமாக பரிசீலிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

மாற்று நடவடிக்கை என்று “தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு கம்பனிகளை போக வேண்டும்” என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டாம் என அரசில் உள்ள மலையக நண்பர்களுக்கு அன்புடன் சொல்கிறேன். கம்பனி போய், காணிகளை அரசாங்கம் பொறுப்பு ஏற்றால் அவை அவர்களது ஆதரவாளர்களுக்கு பிரித்து கொடுக்க பட்டு விடும். இப்படிதான் இன்று அரசிடம் உள்ள ஜனவசம, எல்கடுவ ஆகிய அரசாங்க கம்பனி காணிகள் கேட்பாரின்றி வழங்கப்பட்டு, அங்கே வாழ்ந்த நமது மக்கள் நடுத்தெருவில் இருக்கிறார்கள்.

அப்படி நடந்தால் அது சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை ஆகி விடும். தனியாரிடம் தோட்டங்கள் இருப்பதால் தான் காணிகள் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கின்றன. ஆகவே, சித்திரம் வரைய முடியவில்லை என்பதற்காக சுவரை இடிக்க யோசனை கூற வேண்டாம். சம்பள கோரிக்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கிறேன் என்று காணி உரிமையை அடியோடு அழித்து விட வேண்டாம்.

பெருந்தோட்டங்களில் வாழும் நமது மக்களின் பிரச்சினை தீர பெருந்தோட்ட துறையில் “சிஸ்டம் சேன்ச்” என்ற மீள் கட்டமைப்பை செய்ய வேண்டும். அதுதான் நாம் எப்போதும் சொல்லும் நிரந்தர தீர்வு. நாம் ஆட்சிக்கு வந்து காணி உரிமையை அடிப்படையாக கொண்டு, நமது மக்களை சிறு தோட்ட தொழில் முனைவோராக மாற்றுவோம். அதுவரை தோட்ட காணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஆகவே எங்களது அரசாங்கம் வரும்வரை இந்த தோட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு கம்பனிகளை போக சொல்ல வேண்டாம். எத்தனை பின்னடைவுகள், பிரச்சினைகள் இருந்தாலும், தனியார் கம்பனிகளிடம் இருந்தால் தான் தோட்ட காணிகள் பாதுகாக்கபடும் என்பது எனது உறுதியான நிலைபாடு.