72,200 விவசாயிகளுக்கு 3,820 டன் யூரியா உரம்

1 year ago
Sri Lanka
aivarree.com

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 டன் யூரியா உரம், இலங்கையின் சிறு நெல் வயல்நில விவசாயிகள் மற்றும் நெல் விதை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்கும் நோக்கில் இன்று கமத்தொழில் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அண்மைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72,200 க்கும் மேற்பட்ட நெற் செய்கை விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் இலங்கையின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு FAO மற்றும் EU ஆகியவற்றால் ஆரம்பிக்கப்பட்ட4 மில்லியன் யூரோ (அண்ணளவாக 1.5 பில்லியன் ரூபா) பெறுமதியான திட்டத்தின் கீழேயே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் நெற்செய்கைத் துறை புத்துயிர் பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவைப் பற்றி அதன் தூதுவர் டெனிஸ் சாய்பி கருத்து வெளியிடுகையில்,

  • பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளுக்கு யூரியா உரங்களை விநியோகிப்பது இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்க நாங்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
  • இந்தப் புதிய ஆதரவின் மூலம் உடனடி உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க முடிவதுடன் எதிர்காலத்தில் மிகவும் நிலையான மற்றும் நெகிழக்கூடிய விவசாயத் துறைக்கு மாறுவதற்கு இதன் ஊடாக பங்களிக்கவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.