ஒரே வாரத்தில் 5 மரணங்கள்; ஆராய விசேட வைத்திய குழாம்

3 months ago
Sri Lanka
aivarree.com

ஜனவரி மாதம் முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து டயாலிசிஸ் நோயாளிகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தலைமையிலான ஐவர் கொண்ட நிபுணர் குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

இந்நிலையில் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

குருநாகல் வைத்தியசாலையில் உள்ள டையாலிசிஸ் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டையாலிசின் போது (சிறுநீரக பாதிப்பின் போது மேற்கொள்ளும் சிகிச்சை) விரைவான இரத்த பிளேட்லெட் வீழ்ச்சியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மரணங்கள் ஒரே வாரத்தில் ஐந்து சம்பவித்த நிலையில் அதிகாரிகள் குறித்த பிரிவை மூடியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.