ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அலி சப்ரி ரஹீம்

12 months ago
Sri Lanka
aivarree.com

தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இன்று கலந்து கொண்டார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அவர், பிரேணைக்கு எதிராக வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து Fly Dubai விமானம் FZ547 இலிருந்து இலங்கைக்கு வந்த, விசேட நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதன்போது, அவரது பயணத் பொதிகளை சோதனையிட்ட போது, ​​அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 74 மில்லியன் பெறுமதியான 3 கிலோ 397 கிராம் நிறை கொண்ட தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகள் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 91 ஸ்மார்ட் போன்கள் மீட்கப்பட்டன.

அதற்கமைய, குறித்த பொருட்களின் மொத்த சந்தைப் பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் கூறியிருந்தனர்.