இம்ரான் கானின் தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2 months ago
World
aivarree.com

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார்.
அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அரச ரகசியங்களை கசியவிட்டதாக இம்ரான்கான் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, இம்ரான்கான் சார்பில் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (01) விசாரணைக்கு வந்த தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரம்ஜான் விடுமுறைக்கு பின் வழக்கில் விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.