ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நாளை (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ள நிலையில், ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவுள்ளது.
எனவே இந்த காலப்பகுதியில் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக முடிந்தால் அப்பகுதியை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு வலயம் ராஜகிரியவில் உள்ள சரண மாவத்தையை உள்ளடக்கியதாக இருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அன்றைய தினம் அனைத்து பொது நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்பதாலும், அப்பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மேற்கூறிய காலத்தில் மூடப்பட்டிருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் எந்தவொரு அணிவகுப்பு அல்லது ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.