பிள்ளைகளின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாத்துத் தருவோம் – சஜித்

1 week ago
Sri Lanka
aivarree.com

வட மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்ததால், இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (08) ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பவற்றை மன்னார் புனித ஜோசப் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் வட – கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தி, இதுவரை எந்த தலைவர்களும் தலைமைத்துவம் வழங்காத சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த நாம் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த உதவிகளைப் பெற்று, வடக்கு கிழக்கு இரு மாகாணங்களை மையமாகக் கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். இன, மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி 41 இலட்சம் பிள்ளைகளினது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாத்துத் தருவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.