இஸ்ரேலில் முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர்

1 week ago
Sri Lanka
aivarree.com

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாதவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இஸ்ரேலிய விவசாயத் துறையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலிய விவசாயத்துறை பணிகளுக்கான வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக இஸ்ரேலுக்கு அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேலில் விவசாயத்துறையில் பணிக்காக செல்லும் 43 குழுவினர் சிறந்த முறையில் பணியாற்றுவதன் மூலம் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பு நிமித்தம் செல்லக் காத்திருக்கும் 8000 பேருக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.