இலங்கையில் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவையாக இருக்கிறது.
இதன் ஊடாக பாரியளவு வெளிநாட்டு நாணய ஒதுக்கம் கரைவதாலும், மாதா மாதம் இந்த தொகையை திரட்டிக் கொள்வதில் இருக்கின்ற சிரமத்தினாலும் அரசாங்கம் பல்வேறு தனியார் துறையினரை எரிபொருள் விநியோகிக்க அனுமதித்தது.
இதன்படி 3 சர்வதேச நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டு கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் அந்த நிறுவனங்கள் ஒப்பந்தங்களையும் செய்துக் கொண்டன.
எனினும் இதுவரையில் சினோபெக் நிறுவனம் மாத்திரமே உள்நாட்டில் தமது எரிபொருள் வணிகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனமும் இலங்கையில் தமது எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான முதலீட்டுத் தொகையை அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் செலுத்தி நிறைவு செய்துள்ளது.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இதன்படி நாட்டில் அடுத்த மாதம் முதல் நான்கு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய இலங்கை எண்ணெய்க் கூட்டுத்தாபனம் என்பவற்றைக் காட்டிலும் சினோபெக் நிறுவனத்தில் எரிபொருளுக்கான விலை குறைவாக கிடைக்கிறது.
அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை நடத்தவுள்ள நிலையில், எரிபொருளுக்கான விலை இன்னும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏலவே செய்து கொண்டுள்ளது.
எனினும் அதன் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.