இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் காலிமுகத்திடல் போராட்ட பூமியில் ஒன்று கூடியே, தங்களின் இந்த ஆதரவைத் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகைத் தந்த ஜனாதிபதி, முச்சக்கர வண்டி சாரதிகளின் எதிர்க்காலத்திற்கான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் 2025 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
முச்சக்கரவண்டி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் இன்று காலை கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட பூமியில் ஒன்றுகூடியதுடன், தங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அந்தவகையில், அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்பனவே ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ளன.
இதன்போது கருத்துத் தொிவித்த ஜனாதிபதி, ”நாட்டுக்கு முச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வதில் ஜே.ஆர். ஜயவர்தன விசேட ஆர்வத்துடன் பணியாற்றினார்.
இன்று நாம் நினைத்ததை விட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முச்சக்கர வண்டிகளை வைத்துள்ளனர்.
எனவே, இந்த முச்சக்கர வண்டித் தொழிற்துறையை சரியான கட்டமைப்பிற்குள் நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.
முச்சக்கரவண்டித் தொழிற்துறை எதிர்கொண்டிருந்த ஒழுங்குமுறைப் பிரச்சினையை நாம் ஏற்கனவே தீர்த்துவிட்டோம்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி, இரண்டு அரச வங்கிகள் மூலம் நிவாரணம் வழங்குவதற்கும் தனியார் வங்கிகளுடன் இதுதொடர்பாக கலந்துரையாடவும் எதிர்பார்த்துள்ளோம்.
முச்சக்கர வண்டித் தொழிலுக்கு இன்னும் முறையான அமைப்பொன்று அவசியம்.
ஒவ்வொரு மாகாணத்திலும் இச்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை நியமித்து இங்கு எதிர்கால முன்னெற்றத்திற்கு புதிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கிறோம்.
அடுத்த சில ஆண்டுகளில், எரிபொருள் மட்டுமன்றி மின்சார முச்சக்கரவண்டிகளும் தேவைப்படுகிறன.
இந்தச் செயற்பாடுகள் அனைத்திலும் கவனம் செலுத்தி எமது எதிர்கால முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.