ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க முடிவு

1 week ago
World
aivarree.com

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால், ரஷ்ய இராணுவத்தில், இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட விவகாரம் குறத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புட்டினிடம் வினவியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, நேற்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொஸ்கோ விமான நிலையத்தை சென்றதையடுத்து, அவரை ரஷ்யாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றிருந்தார்.

மொஸ்கோவில் இன்று (09) நடைபெறும், இந்தியா – ரஷ்யா இடையிலான 22ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அவர் ரஷ்யாவுக்கு விஜயசெய்துள்ளமை இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகின்றது.