ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா? – கேள்வி எழுப்பும் வஜிர

1 week ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள நிலையில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதுடன் அதனை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்த போதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர், 5 இலட்சம் ஓய்வூதியதாரிகளும் 65 இலட்சம் சேமலாப நிதியை பெறுவோரும் உள்ளனர்.

இவர்களே நாட்டின் பொருளாதார வேகத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இம்முறை ஒரு கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் நடப்பதால் நாட்டின் பொருளாதார வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. கடந்த காலத்தில் அரச ஊழியர்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர்.

2001 ஆம் ஆண்டிலும் அப்போதைய அரசாங்கம் நெருக்கடிக்கு முகம்கொடுத்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அன்றும் நாட்டை பொறுப்பெடுத்தார்.

ஆனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பொருளாதார வேலைத்திட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. அதனால் இனவாதமும் மதவாதமும் நாட்டுக்கு பரவ ஆரம்பித்தது.

நாடு வேறு திசையை நோக்கி நகர்ந்தது. மீண்டும் அரச சேவையைப் பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 55,000 ஆக உயர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதனுடன், மற்ற வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என அவர் மேலும் தொிவித்தாா்.