வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் நேற்று (08) முற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும் போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.