அதுருகிரிய துப்பாக்கிச் சூடு – ஐவரிடம் வாக்குமூலம் பதிவு – தொடரும் விசாரணைகள்

1 week ago
Sri Lanka
aivarree.com

அதுருகிரிய பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப் வசந்த” என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான கே.சுஜீவாவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற வாகனத்தை புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் துப்பாக்கிதாரிகள் வந்த காரும் கடுவெல பிரதேசத்தில் வைத்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.