ரணிலுக்கு கைமாறுமா அதிகாரம் – பதவி விலகுகிறாரா ஜனாதிபதி?

2 years ago
(467 views)

நாட்டின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. தற்போது விலை அதிகரிக்கப்படாத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கிறது? இதுதொடர்பாக அரசாங்கத்தின் தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் வெவ்வெறு செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.


இப்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளிடம் கையேந்துவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியே இல்லை என்றே சொல்லப்படுகிறது. அரசாங்கம் பெருந்தொகையான கடன்களை வாங்கிக் குவித்து வருகிறது. இதற்கு முன்னர் வாங்கிக் குவித்த கடன்களே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்று அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தை குற்றம் சுமத்துகிறது. ஆனால் இந்த அரசாங்கமும் இப்போது கடன்களை வாங்குவதைத் தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவிதமான திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்கிருந்து ஒரு பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். மேலும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை பெற்றதுடன், அந்த கடன் வசதியை இன்னும் 250 மில்லியன் டொலர்களால் அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய மறுநாளே புதிதாக ஒரு பில்லியன் டொலர் கடன் கேட்டு சீனாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை சீனாவின் தூதுவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

இதன்படி சீனாவிடம் இலங்கை 4 பில்லியன் டொலர் கடனாகக் கோரி இருக்கிறது. அதில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவு கடன் வசதி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியதில் ஒரு பில்லியன் புதிய கடனாகவும், 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் வசதியாகவும் கோரியுள்ளது. இதுகுறித்த முடிவை சீனா இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வொசிங்டன் சென்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புக்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு இலங்கையின் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவினால் சர்வதேச நாணய நிதியத்திடம் உத்தியோகப்பூர்வமாகக் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்னுமொரு பாரிய பிரச்சினையாக உள்ளது. அரசாங்கத்தை விமர்சித்து வந்த விமல் வீரவன்ச போன்ற பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்ற செய்தியை அனுப்பத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்னும் தொடர்கிறது. அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற ரொசான் ரணசிங்க தற்போது அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அரசாங்கம் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கக்கூடாது எனவும், அதற்காக மௌனம் காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் இந்த நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். 2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்ல நேர்ந்தமைக்கு அவ்வாறான சூழ்நிலையே காரணம். வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொண்டு வந்தாலும் மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் வரிசையிலேயே நிற்கிறார்கள். எனவே மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்திருந்தார். இதேபோன்ற குற்றச்சாட்டை சிறிலங்கா பொதுஜன பெரனமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவும் முன்வைத்திருந்தார். நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலைமை நீடித்தால் அடுத்ததாக ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அதில் தங்களால் வெற்றிபெறவே முடியாது என்ற அச்சம் அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் மத்தியில் உள்ளது. இன்னும் சிலர் இந்த சூழ்நிலையால் மக்கள் அடைந்துள்ள பிரச்சினைகளை உணர்ந்தும் இருக்கிறார்கள். இதன் காரணமாக அரசாங்கத்தை அவர்கள் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியும், அதனால் மக்கள் ஆங்காங்கே தன்னிச்சையாகப் போராட்டங்களை நடத்துகின்றமை போன்ற பல்வேறு காரணங்களால் ஜனாதிபதி பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவரது பல்வேறு தீர்மானங்கள் குறித்து பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமக்கு நெருக்கமான இராணுவ பின்னணிக் கொண்டவர்களை மாத்திரம் அவர் வைத்துக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசாங்க அமைச்சர்கள் பெரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். பசில் சொல்வதைக் கேட்பதா? ஜனாதிபதி கோட்டா சொல்வதைக் கேட்பதா? பிரதமர் மகிந்த சொல்வதைக் கேட்பதா? என்ற நிலையில் அவர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு விரோதமான பல நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அறியக் கிடைக்கிறது. நிதி நெருக்கடிக்குத் தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்ட நாட்களாக ஜனாதிபதியின் மீது பிரயோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொள்ளாதிருந்தார். தற்போது அவரும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு சம்மதித்துள்ளமை, இந்த நெருக்கடி அவருக்கு எந்த அளவுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது. இந்த சூழ்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த மாதம் 23ம் திகதி சர்வகட்சி மாநாடு நடக்கிறது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க தற்போதைய நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கைகள் தற்பொழுது பழிக்க ஆரம்பித்து இருக்கின்றன என்பது உண்மைதான்.

அவருக்குப் பிரதமர் பதவியை வழங்கும் வகையில், அவரது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய வல்லமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். இதன் காரணமாக அவருக்கு அரசாங்கத்தின் முக்கியமான அதிகாரத்தை வழங்குவதற்கும் குறிப்பாக பிரதமர் பதவியை வழங்குவதற்கு எத்தனிக்குகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவினால் பரப்பப் பட்டவை என அய்வரிக்கு விபரங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி பதவி விலகவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாக்கப்பட்டிருந்தன. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்று ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழ்நிலை ஒன்றின் போது நாட்டை கைவிட்டுச் செல்லும் மனிதர் அவர் இல்லை என்று, கிங்ஸிலி ரத்நாயக்க ஜனாதிபதி குறித்து அய்வரி செய்திகளுக்குச் சொல்லி இருந்தார்.

இதேவேளை சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அய்வரி செய்திகளுக்கு இந்த தகவலை வழங்கினார். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது யூடியூப் தளத்துக்கு சப்ஸ்க்ரைப் செய்து, செய்தி காணொளிகளை காணுங்கள்.

Show full article

Leave a Reply

Your email address will not be published.